3 மாதங்களுக்குப் பின் திறக்கப்பட்ட பாம்பன் தூக்கு பாலம்... ஆர்வத்துடன் ரசித்த பொதுமக்கள்!

3 மாதங்களுக்குப் பின் திறக்கப்பட்ட பாம்பன் தூக்கு பாலம்... ஆர்வத்துடன் ரசித்த பொதுமக்கள்!
3 மாதங்களுக்குப் பின் திறக்கப்பட்ட பாம்பன் தூக்கு பாலம்... ஆர்வத்துடன் ரசித்த பொதுமக்கள்!

பாம்பன் ரயில் தூக்கு பாலம் வழியாக இந்திய கடற்படை ரோந்து கப்பல் மற்றும் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கடந்து சென்றதை சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் கண்டு ரசித்தனர்.

ராமேஸ்வரம் அடுத்துள்ள பாம்பன் தூக்கு பாலம் உலக புகழ்பெற்ற ஒன்று. நூற்றாண்டை கடந்த பாம்பன் ரயில் பாலம் கடல் பாதை வழியாக கொல்கத்தா, அந்தமான் தீவுகளுக்கு செல்லலாம். இந்த தூக்கு பாலத்தின் வழியாக ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து நடைபெற்று வந்தது. இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் பாம்பன் தூக்கு பாலத்தில் ஏற்பட்ட தொழில் நுட்பக் கோளாறு காரணமாக பாம்பன் ரயில் பாலம் வழியாக ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 10க்கும் அதிகமான ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கேரள மாநிலம் கொச்சியில் மீன்பிடி சீசனை முடித்துக் கொண்டு சொந்த ஊருக்கு செல்வதற்காக பாம்பன் தெற்கு கடல் பகுதிக்கு வந்தது. அதே போல் இந்திய கடற்படைக்குச் சொந்தமான சொகுசு ரோந்து கப்பல் (பவர் போட்) மற்றும் மிதவை படகு ஒன்றும் பாம்பன் மீன்பிடி துறைமுகம் அருகே நிறுத்தப்பட்டிருந்தது.

இதையடுத்து பாம்பன் ரயில் தூக்குபாலத்தை கடந்து செல்ல பாம்பன் துறைமுக அதிகாரிகளிடம் அனுமதி கேட்டனர். துறைமுக அதிகாரிகள் ரயில்வே துறை அதிகாரிகளிடம் இன்று அனுமதி பெற்று, பாம்பன் தூக்குபாலம் திறக்கப்பட்டது. அதன்பின் தெற்கு கடல் பகுதியில் காத்திருந்த 10 ஆழ்கடல் மீன்பிடி விசைப் படகுகள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து நாகப்பட்டினம் நோக்கி சென்றது.

அதைத் தொடர்ந்து இந்திய கடற்படைக்குச் சொந்தமான சொகுசு ரோந்து கப்பல் கொச்சினில் இருந்து அந்தமான் நோக்கியும், மிதவை கப்பல் ஒன்று கொச்சினில் இருந்து விசாகபட்டினம் நோக்கியும் அடுத்தடுத்து கடந்து சென்றது. இதை பாம்பன் சாலை பாலத்தில் நின்றிருந்த பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்ததோடு செல்போன்களில் வீடியோ எடுத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com