நடுரோட்டில் பற்றி எரிந்த பி.எம்.டபுள்யூ கார்: சென்னை பரபர
சென்னை கொளத்தூரில் சாலையில் சென்றுகொண்டிருந்த பி.எம்.டபுள்யூ கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை கொளத்தூர் செந்தில் நகர் பகுதியில், பி.எம்.டபுள்யூ (BMW) கார் ஒன்று சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென காரின் முன் பகுதியில் இருந்து புகை வந்ததால், காரின் ஓட்டுநர் இறங்கி ஓடினார்.
சற்று நேரத்தில் புகை தீயாக மாறி, கார் மளமளவென எரியத் தொடங்கியது.
இதைக்கண்ட கார் அருகில் இருந்த சுற்றுப்புறத்தினர் விலகி தொலைவாக ஓடினர். பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புதுறையினர் வர தாமதமானதால், அவ்வழியே வந்த தண்ணீர் லாரியை நிறுத்தி பொதுமக்களே தீயை அணைத்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ராஜமங்களம் போலீசார் விசாரித்து வருகின்றனர். கோடைக்காலம் என்பதால், வெப்பத்தின் காரணமாக கார் எரிந்திருக்கலாம் என கருதப்படுகிறது.