புதுச்சேரியில் ப்ளூவேல் கவுன்சிலிங் மையங்கள்: நாராயணசாமி அறிவிப்பு
புதுச்சேரியில் ப்ளூவேல் விளையாட்டு குறித்த விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த முதல்வர்கள், நிர்வாகிகள் பங்கு பெற்றனர். கல்வித்துறை செயலர், இயக்குநர் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். மாணவர்களின் நடத்தையை எப்படி கண்காணிப்பது, ப்ளூவேல் விளையாடும் மாணவர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்று சைபர் க்ரைம் பிரிவை சேர்ந்தவர்கள் மற்றும் மனநல ஆலோசகர்கள் கொண்டு ஆலோசனை வழங்கப்பட்டது.
கூட்டத்திற்கு பின்னர் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, புளூவேல் விளையாட்டால் பாதிக்கப்படுபவர்களுக்காக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கவுன்சிலிங் மையங்கள் தொடங்கப்படும் என்றார். புளூவேல் விளையாட்டின் இணையதளங்களை தடை செய்ய மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளதாகவும் கூறியுள்ளார். புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இருந்து ப்ளூவேல் விளையாட்டால் பாதிக்கப்பட்ட இரண்டு மாணவர்கள் ஏற்கனவே மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.