ப்ளூவேல் கேம்... நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் நண்பர் தற்கொலை முயற்சி
ப்ளூவேல் விளையாட்டு உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த விபரீத விளையாட்டை ஆன்லைனில் விளையாடுபவர்கள் இறுதியில் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
இதுவரை இந்தியாவில் இந்த விளையாட்டுக்கு அடிமையாகி 5 பேர் இறந்துள்ளனர். இந்த விளையாட்டால் சமீபத்தில் சென்னை விருகம்பாக்கத்தில் கல்லூரி மாணவி ஒருவர் 7வது மாடியிலிருந்து கீழே குதித்துத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மக்களை அதிர வைத்தது.
இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரின் குடும்ப நண்பர் ப்ளூவேல் கேம் விளையாடியதால் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதுகுறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகையில், ‘ப்ளூவேல் விளையாட்டால் எனது சகோதரரின் நண்பரும் எங்களது குடும்ப நண்பருமான 23 வயது இளைஞர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அவர் தற்கொலைக்கு முயன்றதை பார்த்த சிலர் அவரை காப்பாற்றி உள்ளனர். சோசியல் மீடியாக்களும், ஸ்மார்ட் போன்களும் நம் வாழ்க்கையில் ஒரு சிறு பகுதிதான். நாம் அவற்றை கட்டுக்குள் வைத்து சரியான நோக்கத்திற்கு பயன்படுத்த வேண்டும். தேவையில்லாத நோக்கத்திற்காக பயன்படுத்தினால் தேவையில்லாத விபரீதங்களில் கொண்டுபோய் சேர்த்து விடும். அது முட்டாள் தனமானது. இந்த விளையாட்டு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்’ எனத் தெரிவித்தார்.