ஸ்டாலினைத் தடுப்பது அரசியலமைப்புக்கு எதிரானது: கட்சராயன் ஏரி வழக்கில் நீதிமன்றம்
சேலம் மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி தொகுதியில் இருக்கும் கட்சராயன் ஏரியை பார்வையிட எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலினை தடுப்பது அரசியலமைப்பிற்கு எதிரானது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
தூர்வாரப்பட்ட கட்சராயன் ஏரியை கடந்த மாதம் பார்வையிட சென்ற ஸ்டாலின் தடுத்து நிறுத்தப்பட்டார். இது தொடர்பாக திமுக சட்டப்பிரிவு செயலாளர் கிரிராஜன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நீதிபதி எம்.துரைசாமி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கட்சராயன் ஏரியை பார்வையிட ஸ்டாலினுடன் 128 பேர் செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என மனுதாரர் வலியுறுத்தினார். ஆனால், கட்சராயன் ஏரிக்கு செல்ல ஸ்டாலினுக்கு அனுமதியளித்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கட்சராயன் ஏரியில் மணல் திருட்டு தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்த அரசு வழக்கறிஞர், அதைத் தவிர வேறெந்த ஏரியை வேண்டுமென்றாலும் ஸ்டாலின் பார்வையிடலாம் என்று கூறினார். இதைக் கேட்ட நீதிபதி, வழக்கிற்கு தொடர்பில்லாத மணல் திருட்டு ஆவணங்களை அரசு தாக்கல் செய்தது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். அதன் மூலம் எதிர்க்கட்சித் தலைவர் மணல் திருட முயல்கிறார் என அரசு கருதுகிறதா? என்றும் வினவினார்.
கட்சராயன் ஏரியை பார்வையிட எதிர்க்கட்சித் தலைராக இருக்கும் ஸ்டாலினை தடுப்பது அரசியலமைப்பிற்கு எதிரானது என்றும், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் அதை தடுப்பது காவல்துறையின் கடமை என்றும் கூறி ஸ்டாலினுடன் 25 பேர் கட்சராயன் ஏரியை பார்வையிட நீதிபதி அனுமதியளித்தார்.