”மித்ராவின் மருந்துக்கான வரியை மத்திய நிதியமைச்சர் நீக்கியுள்ளார்”- வானதி சீனிவாசன் ட்வீட்

”மித்ராவின் மருந்துக்கான வரியை மத்திய நிதியமைச்சர் நீக்கியுள்ளார்”- வானதி சீனிவாசன் ட்வீட்
”மித்ராவின் மருந்துக்கான வரியை மத்திய நிதியமைச்சர் நீக்கியுள்ளார்”- வானதி சீனிவாசன் ட்வீட்

முதுகுத்தண்டுவடப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட சிறுமி மித்ராவுக்கான மருந்தின் மீதான 6 கோடி ரூபாய் மதிக்கத்தக்க ஜி.எஸ்.டி. உள்ளிட்ட வரிகளை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நீக்கியிருப்பதாக, பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் கூறியுள்ளார். வரியை நீக்கியதற்காக நிர்மலா சீதாரமனுக்கு வானதி ஸ்ரீனிவாசனுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காந்திநகர் பகுதியில் வசிக்கும் சதீஷ்குமார்- பிரியதர்ஷினி தம்பதிக்கு மித்ரா என்ற இரண்டு வயது குழந்தை உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மித்ராவுக்கு நடப்பதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில், அவருக்கு முதுகுத் தண்டுவடம் சிதைவு நோய் தாக்கியிருப்பது தெரியவந்தது. இந்த நோயை குணப்படுத்துவதற்கான மருந்தின் விலை 16 கோடி ரூபாய் ஆகும். ஜிஎஸ்டி உள்ளிட்ட வரிகளை சேர்த்து 22 கோடி ரூபாய் தேவைப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதில் மருந்தின் விலையான 16 கோடி ரூபாயை, நண்பர்கள் மூலமாகவும் தன்னார்வலர்கள் மூலமாகவும் சிறுமியின் பெற்றோர் பெற்றிருந்தனர். மருந்துக்கான தொகை கிடைத்தும்கூட, ஜி.எஸ்.டி. காரணமாக மருந்து வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் மருந்துக்கு ஜி.எஸ்.டி. விலக்கு வேண்டுமென பிரதமர் மோடிக்கும் நிர்மலா சீதாராமனுக்கும் கடிதம் எழுதினர். மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கையும் வைத்தனர்.

இவ்விவகாரத்தில் தலையிட்ட தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிர்க்காக்கும் மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி. வேண்டுமென்றும், முதுகெலும்பு தசை செயலிழப்பு சிகிச்சைக்கான மருந்துகளுக்கு வரிவிலக்குகோரியும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார். உயிர்காக்கும் மருந்துகளை இறக்குமதி செய்யும்போது சுங்கவரி, ஜிஎஸ்டி உள்ளிட்ட இதர வரிகளுக்கு விலக்கு தேவைப்படுவதாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டார்.

இவ்விவகாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தலையிட்டு கோரிக்கை வைத்த நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று சிறுமி மித்ராவின் மருந்துக்கு இறக்குமதி வரியை ரத்து செய்துள்ளளார்.

நிர்மலா சீதாரமனின் இந்த செயலை பாராட்டி, பாஜக தேசிய மகளிர் அணி தலைவரான வானதி ஸ்ரீனிவாசன், “சிறுமி மித்ராவின் மருந்துக்கு இறக்குமதி வரியை ரத்து செய்து குழந்தைக்கு இன்னொரு தாயாக மாறினீர்கள்” என ட்வீட் செய்துள்ளார். மேலும் ‘ஈரோட்டை சேர்ந்த சிறுமி மித்ராவின் விலக்கு அளித்தற்கு மிக்க நன்றி’ என்றும் அவர் கூறியுள்ளார். முன்னராக தாம் நேற்றைய தினம் இதுபற்றி நிர்மலா சீதாராமனிடம் பேசியிருந்ததாகவும், அப்போதே அவர் சிறுமிக்கு உதவுவதாகவும் தாயுள்ளத்துடன் கூறியதாகவும் ட்வீட் செய்திருந்தார் வானதி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com