ஹெச்.ராஜா தரம் தாழ்ந்து பேசியிருக்க வேண்டாம்: எஸ்.வி.சேகர்
தவறு செய்தவரே மேலோட்டமாக மன்னிப்புக் கேட்ட பின் தங்களின் விவேகமில்லாத ஆவேசம் எதற்கு என்று, இயக்குநர் பாரதிராஜாவுக்கு எஸ்.வி.சேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக இயக்குனர் பாரதிராஜாவின் பேச்சு குறித்து எஸ்.வி.சேகர் வெளியிட்ட அறிக்கையில், ஆவேசத்துக்கு பதில், வாயைக் கொடுத்து வாங்கி கட்டிக்கொண்டது தேவையா என்று வைரமுத்துவை கேட்டிருந்தால், நியாயமானவராக இருந்திருப்பீர்கள் என்று கூறியுள்ளார். இதில், ஆன்மிக இந்துக்களின் ஆதரவு ஒரு சதவிகிதம்கூட பாரதிராஜாவுக்கு இல்லை என்று எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.
வைரமுத்து அளவிற்கு ஹெச்.ராஜாவும் தரம் தாழ்ந்து பேசியிருக்க வேண்டாம் என்பது தனது கருத்து என்றும் அவர் கூறியுள்ளார். கோடிக்கணக்கான இந்துக்களின் தாயார் ஆண்டாள் என்று குறிப்பிட்டுள்ள எஸ்.வி.சேகர், இந்த எதிர்வினைக்கு மீண்டும் எதிர்வினையாற்ற முயற்சிக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.