மக்களவைத் தேர்தலில் ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா வெளியிட்டார்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிட இருக்கும் முதற்கட்ட பாஜக வேட்பாளர்கள் பட்டியலை மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா டெல்லியில் நேற்று முன்தினம் வெளியிட்டார். 182 பேர் கொண்ட அந்த பட்டியலில் வாரணாசியில் மோடியும், காந்திநகரில் அமித்ஷாவும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் டெல்லியில் பாரதிய ஜனதாவின் மத்திய தேர்தல் கமிட்டி கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் அந்தக் கூட்டத்தில் பங்கேற்று வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்தனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா, மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 36 பேர் கொண்ட இரண்டாவது வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதாக கூறினார். இதில் ஒடிசா மாநில பாரதிய ஜனதா தலைவர் வசந்த பாண்டா, மூத்த தலைவர் சுரேஷ் புஜாரி, செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். முதல் மற்றும் இரண்டாவது கட்டத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை முடிவு செய்வதில் பாஜகவின் தேர்தல் கமிட்டி கூட்டம் விரைந்து பணியாற்றி வருகிறது என்றும் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.