“பாஜக அரசு புயல் நிவாரணம் வழங்காமல் வஞ்சித்தது” - திருநாவுக்கரசர்
உண்மையானவருக்கு மக்கள் வாக்களித்தால் அவர் அமைச்சரானாலும் மனிதராக இருப்பார் என திருச்சி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர், திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். நாளையுடன் தமிழகத்தில் பிரச்சாரம் ஓய்வு பெறும் நிலையில், அவர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் புதிய தலைமுறையிடம் பேசிய அவர், “கஜா புயலில் லட்சக்கணக்கான தென்னைகள் சாய்ந்தன. கஜா பாதித்த பகுதிகளில் விவசாயிகள் இன்னும் தவிப்பில் உள்ளனர். பாஜக அரசு புயல் நிவாரணம் வழங்காமல் பாதிக்கப்பட்டவர்களை வஞ்சித்தது. நான் வெற்றி பெற்றால் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பேன். முடிந்தால் அதிகமான நிவாரணம் பெற்றுத் தருவேன்" என்றார்.
தொடர்ந்து பேசிய திருநாவுக்கரசர், “ ஸ்ரீரங்கத்தில் அடிமனை பிரச்னை நிலவி வருகிறது. திருவெறும்பூரில் சர்வீஸ் சாலை பிரச்னை உள்ளது. ஸ்ரீரங்கம், திருவெறும்பூர் மக்கள் தேர்தலை புறக்கணிக்காதீர்கள். வாக்காளர்கள் தேர்தலில் பங்கேற்று வாக்களியுங்கள். காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உள்ளது. மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.
பெல் நிறுவனத்தை நம்பியுள்ள சிறு, குறு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. சிறு, குறு நிறுவனங்கள் மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். முடிந்தால் இன்னும் விரிவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உண்மையானவருக்கு வாக்களித்தால் அமைச்சரானாலும் அவர் மனிதராக இருப்பார். எனக்கு 42 ஆண்டுகள் அனுபவம் உள்ளது. எனது அனுபவத்தின் மூலம் தொகுதிக்கு நல்லது செய்வேன். வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என நிரூபித்துள்ளேன். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை திருச்சியிலும் நிரூபிப்பேன்” என்று தெரிவித்தார்.