“ரஞ்சித் நோக்கமே சாதிக் கலவரத்தை தூண்டுவது தான்” - ஹெச்.ராஜா குற்றச்சாட்டு
இயக்குநர் பா.ரஞ்சித்தின் நோக்கமே இந்து சமுதாயத்தில் ஜாதிக் கலவரத்தை தூண்டுவது தான் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் எழுந்தருளியுள்ள அத்தி வரதரை ஹெச்.ராஜா தனது குடும்பத்தினருடன் தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “ராஜராஜசோழன் தற்போது உயிரோடு இருந்திருந்தால் பா.ரஞ்சித் எந்த ஒரு கருத்தும் கூறியிருக்க மாட்டார். சரித்திர ஆதாரங்களோடு ராஜராஜ சோழன் காலத்தில் தனி உடமை, நிலவுடைமை என்பது கிடையாது. ராஜராஜ சோழன் காலத்தில் தீண்டாச்சேரி என்கின்ற ஒன்று இருந்தது. தீண்டாமை என்பது சமண மதம் வந்த பிறகுதான் உருவானது. சமண மதத்தில் தண்டனை என்பது கிடையாது. அதனால் கொலை செய்பவர்கள், பாலியல் வன்கொடுமை செய்தவர்கள், உயிரை கொன்று உண்பவர்கள் போன்றவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருந்தார்கள்.
இந்து சமுதாயத்தில் எப்போதும் தீண்டாமை என்பது இருந்தது கிடையாது. எனவே ராஜராஜ சோழன் காலத்தில் தீண்டாமை என்பது இருந்திருக்க வாய்ப்பே கிடையாது. இது திட்டமிட்டு செய்யப்பட்ட கிறிஸ்தவ மதமாற்ற சக்திகளுடைய சதி தான். இயக்குனர் ரஞ்சித் இந்து கிடையாது. நான் ஆதாரங்களோடு சில விஷயங்களை சமர்ப்பித்தால் சிலருக்கு கோபம் வருகிறது. பா.ரஞ்சித், வைரமுத்து போன்றவர்களுடைய நோக்கமே இந்து சமுதாயத்தில் சண்டையை மூட்டி, அதில் ஜாதி கலவரத்தை தூண்டிவிட்டு, அதன் மூலம் மத மாற்றம் செய்ய வேண்டும் என்பது தான். எனவே ரஞ்சித்தின் செயலானது, மதமாற்றத்தின் ஒரு பகுதியாகும்” என்று குற்றம்சாட்டினார்.