பாஜக - அதிமுக கூட்டணிக்கு அண்ணாமலை எதிர்ப்பா? நிர்வாகிகள் கூட்டத்தில் நடந்தது என்ன?

பாஜக - அதிமுக கூட்டணிக்கு அண்ணாமலை எதிர்ப்பா? நிர்வாகிகள் கூட்டத்தில் நடந்தது என்ன?
பாஜக - அதிமுக கூட்டணிக்கு அண்ணாமலை எதிர்ப்பா? நிர்வாகிகள் கூட்டத்தில் நடந்தது என்ன?

தமிழ்நாடு பாஜக - அதிமுக இடையிலான முரண்பாடுகள் குறித்து பல பரபரப்பு கருத்துகளும், விமர்சனங்களும் இருதரப்பிலும் அண்மைக்காலமாக தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், இவற்றுக்கெல்லாம் மேலும் தீனி போடும் வகையில் மாநில தலைவரான அண்ணாமலை பேசியதாக வெளியான செய்தி அமைந்திருக்கிறது.

அதிமுக - பாஜக கூட்டணிக்கு அண்ணாமலை எதிர்ப்பா?

அதாவது, தமிழ்நாட்டில் நாம் தனியாக தேர்தலை சந்தித்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும், கூட்டணி நிலைப்பாட்டை எடுத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன் என பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாகவும் இதற்கு அக்கட்சியினர் மத்தியிலேயே எதிர்ப்பு எழுந்ததாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

எங்கு நடந்தது?

சென்னை அமைந்தகரையில் உள்ள திருமண மண்டபத்தில் தமிழ்நாட்டு பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் அணி தலைவர்கள் கூட்டம் நேற்று (மார்ச் 17) நடைபெற்றது. இந்த கூட்டத்தில்தான் அண்ணாமலை கூட்டணி நிலைப்பாடு குறித்துதான் பரபரப்பாக பேசியிருக்கிறாராம்.

அதில், “தமிழகத்தில் நாம் தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். அ.தி.மு.கவுடனான கூட்டணி நிலைப்பாட்டை எடுத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன். பிரதமர் மோடியை சந்திப்பதற்கு நேரம் கேட்டிருக்கிறேன். ” என பாஜகவின் அண்ணாமலை பேசியிருப்பதாக தகவல்கள் கசிந்திருக்கிறது.

இதற்கு கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதோடு, கட்சியின் தேசிய மகளிரணி தலைவியும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசனும், பாஜகவின் நிர்வாகி நாராயணன் திருப்பதியும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தகவல் கசிந்திருக்கிறது.

அப்போது கட்சியின் மையக் குழுவில் பேச வேண்டிய கருத்தை ஏன் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசுகிறீர்கள் என அண்ணாமலையை நோக்கி கேள்வியும் முன்வைக்கப்பட்டதாம். இந்த செய்தி சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ள நிலையில், இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் நாராயணன் திருப்பதி புதிய தலைமுறையிடம் தொலைபேசி வாயிலாக தன்னுடைய விளக்கத்தையும், கண்டனத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

அதில், “நல்ல திரைக்கதை, வசனத்தை நிகழ்த்தியிருக்கிறார்கள். எங்களுடைய கட்சியில், 4 சுவரில் நடக்கக்கூடிய விஷயத்தை இட்டுக்கட்டி வேண்டுமென்றே பரப்பியிருக்கிறார்கள். இது தவறானது. இது முற்றிலும் எங்களுடைய உட்கட்சி விவகாரம். நாங்கள் பேசாததை சித்தரித்து பரப்புவதை வன்மையாக கண்டிக்கிறோம். கட்சியில் ஒரு சிலர் பேசுவதை பொதுவான கருத்தாக எடுத்துக் கொள்ள முடியாது. கம்யூனிஸ்ட் கட்சி கூட திமுகவை கடுமையாக சாடியிருக்கிறது. அதற்காக இருதரப்பினர் இடையே கூட்டணியில் விரிசல் என்று விவாதிக்க முடியுமா?. பாஜக வலுவாக திமுக அரசை எதிர்த்து வருகிறது. அதிமுகவும் அதனை செய்து வருகிறது” எனக் கூறியிருக்கிறார் நாராயணன் திருப்பதி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com