கிரண் பேடி பதவி பிரமாணம் செய்து வைத்தது செல்லாது: புதுச்சேரி சபாநாயகர்
புதுச்சேரியில் ஆளுநர் கிரண் பேடியால் பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்ட பாஜகவினர் 3 பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக ஏற்றுக்கொள்ள மீண்டும் சபாநாயகர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அரசியலில் காங்கிரஸ் முதல்வர் நாராயணசாமிக்கும், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்குமான பனிப்போர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் ஆளுநர் கிரண் பேடியால் பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்ட பாஜகவினர் 3 பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக ஏற்றுக்கொள்ள மீண்டும் சபாநாயகர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
குடியரசு தலைவரிடமிருந்து முறையான கடிதம் வராததால் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான அங்கிகாரத்தை அந்த மூவருக்கும் வழங்க இயலாது என்றும் விளக்கப்பட்டுள்ளது. நியமன எம்.எல்.ஏக்கள் நியமனம் குடியரசு தலைவரால் மேற்கொள்ளப்படவில்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் ஆகியோருக்கு சட்டப்பேரவை செயலர் அனுப்பியுள்ள கடிதத்தில், அவர்களது பதவி பிரமாணம் ஏற்று கொள்ளப்படாததால் எம்.எல்.ஏக்களுக்கான எந்த சலுகைகள், வசதிகளை கோர முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.