“மோடியின் அருமை ட்ரம்ப்-க்கு தெரிகிறது; ஆனால்...” - பாஜக நிர்வாகி சரத்குமார்!
செய்தியாளர்: சு.சுந்தரமகேஷ்
தென்காசி மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் புதிய மாவட்ட தலைவராக ஆனந்தன் அய்யாசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தென்காசி மாவட்ட நிர்வாகிகளுடன் மாவட்ட தலைவர் அறிமுக விழா தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் நடிகர் சரத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் சரத்குமார் பேசுகையில்...
“3 வது முறையாக பாஜக நல்லாட்சி நடைபெற்று வருகிறது. திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். ஆனால், திமுக அரசு அதை தான் செய்வதாக கூறுகிறது. திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். கிராம புறங்கள், நகர் புறங்களாக மாற வேண்டும். அதனை ஆனந்த அய்யாசாமி செய்துவருகிறார். இதனால் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுவார்கள்.
“பெண்களுக்கு பாதுகாப்பில்லாத ஆட்சி திராவிட மாடல் ஆட்சி”
மாவட்ட தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஆனந்தன், வெளிநாட்டில் கற்றவற்றை பயன்படுத்தி இங்கே தொழிற்சாலைகள் அமைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். திராவிடமாடல் ஆட்சியில் எந்த டெவலப்மெண்ட்டும் இல்லை. அரசியல் மட்டுமே பேசுவார்கள். பெண்களுக்கு பாதுகாப்பில்லாத ஆட்சி, இந்த திராவிட மாடல் ஆட்சி.
வேகமாக் இந்தியா வளர்ந்து வருகிறது. பட்ஜெட் அனைத்து மாநிலங்களுக்குமான பட்ஜெட். மத்தியில் எதை சொன்னாலும் எதிர்ப்பதுதான் திராவிட மாடல் ஆட்சி. 2026 தேர்தல் ஓர் அக்னி பரிட்சை. 234 தொகுதியிலும் நாம் வெற்றி பெற வேண்டும்.
“இந்தியாவை வல்லரசாக உருவாக்க வேண்டும் என உழைப்பவர் மோடி”
பதவிக்காக நாம இந்த இயக்கத்திலே இல்லை. உணர்வுக்காக, உழைப்பிற்காக, மக்களின் நலனிற்கு பாடுபடுவதற்காக இருக்கிறோம்.
என்னை விட அதிகமாக அரசியல் தெரிந்தோர் கலையுலகில் இல்லை. ஆனால், பலர் இப்போது புதிதாக பேசி அரசியலுக்கு வருகின்றனர்.
அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு, மோடியின் அருமை தெரிகிறது. நம் கடைக்கோடி மக்களுக்கு அவரை தெரியவில்லை. உலகத்தின் முதன்மை நாடாகவும், வல்லரசாகவும் இந்தியாவை உருவாக்க வேண்டும் என உழைப்பவர் மோடி. 2026ல் தாமரை மலரும், மலரும் மலர்ந்தே தீரும்” என்று பேசினார்