“சசிகலா பாஜக-வுக்கு வந்தால் வரவேற்போம்; அதற்கான முயற்சிகளில் உள்ளோம்”- நயினார் நாகேந்திரன்

“சசிகலா பாஜக-வுக்கு வந்தால் வரவேற்போம்; அதற்கான முயற்சிகளில் உள்ளோம்”- நயினார் நாகேந்திரன்
“சசிகலா பாஜக-வுக்கு வந்தால் வரவேற்போம்; அதற்கான முயற்சிகளில் உள்ளோம்”- நயினார் நாகேந்திரன்

“பாஜக-விற்கு வந்தால் சசிகலாவை வரவேற்போம். சசிகலா பாஜக-வுக்கு வருவது, பாஜக வளர உதவியாக இருக்கும்” என நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார்.

புதுக்கோட்டைக்கு திருமண விழாவில் கலந்துகொள்ள வந்த தமிழக சட்டமன்ற பாஜக தலைவரும் முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அதிமுகவில் சசிகலாவை சேர்த்தால் அதிமுக வலுப்பெறும். ஒருவேளை அதிமுகவில் சசிகலாவை சேர்க்க விருப்பம் இல்லை என்றால், அவர் பாரதிய ஜனதா கட்சிக்கு வந்தால் நாங்கள் அவரை வரவேற்போம். அது எங்களுக்கு வளர உதவியாக இருக்கும் என்பதால், இதற்கான முயற்சிகளை நாங்கள் எடுத்து வருகிறோம்” என பேட்டியளித்துள்ளார்.

அவர் மேலும் பேசுகையில், “கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு ஏன் பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை என்று திமுக கேட்டது. ஆனால் இரண்டு முறை தற்போது பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு குறைத்து விட்டது. இருப்பினும் தமிழக அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைப்பதற்கு தயாராகவில்லை. பெயரளவிற்கு பெட்ரோல் விலையை மட்டும் சிறிது குறைத்து விட்டு அவர்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு வருகின்றனர். ஒன்றிய அரசு என்று கூறுவதை திமுகவினர் பெருமையாக கருதுகின்றனர். திமுக தங்களை பெருமைப்படுத்திக் கொள்வதை முன்னெடுத்து செல்கிறதே தவிர, மக்கள் பிரசினையை மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்கான வேலைகளை முன்னெடுக்கவில்லை” என்றார்.

தொடர்ந்து, “தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை தொடர்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் முதலமைச்சர் தனிக் கவனம் செலுத்த வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com