"உதயநிதியின் பிரசாரத்தை ஒரு பொருட்டாக கருதவில்லை"- எல்.முருகன்

"உதயநிதியின் பிரசாரத்தை ஒரு பொருட்டாக கருதவில்லை"- எல்.முருகன்
"உதயநிதியின் பிரசாரத்தை ஒரு பொருட்டாக கருதவில்லை"- எல்.முருகன்

உதயநிதி ஸ்டாலினின் பிரசாரத்தை தாங்கள் ஒரு பொருட்டாக கருதவில்லை என பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்

டெல்லி சென்றுள்ள பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைமை அலுவலகத்தில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளர் சி.டி.ரவி மற்றும் பி.எல்.சந்தோஷ் உள்ளிட்டோரை சந்தித்தார். இதன்பிறகு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

''பாரதிய ஜனதா கட்சியின் வெற்றிவேல் யாத்திரை நிவர் புயல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வெற்றிவேல் யாத்திரை மீண்டும் வருகிற 3-ம் தேதி அல்லது 4-ம் தேதி தொடங்கி திருச்செந்தூரில் நிறைவடைய இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியின் வெற்றிவேல் யாத்திரைக்கு அனைத்து தரப்பினரிடமும், குறிப்பாக முருக பக்தர்கள் இடையே நல்ல வரவேற்பு இருக்கிறது.

நிவர் புயலால் பெரிய பாதிப்பு ஏற்படும் என அச்சம் அடைந்தோம். ஆனால் அரசின் சிறப்பான நடவடிக்கையின் காரணமாக பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. இந்த விஷயத்தில் தமிழக அரசின் செயல்பாடு மிகவும் சிறப்பாக இருந்தது.

அதிமுக மற்றும் பாரதிய ஜனதா இடையே கூட்டணி உறுதி செய்யப்பட்டாலும் தொகுதி பங்கீடு என்பது அகில இந்திய பாரதிய ஜனதா கட்சியின் தலைமை தான் முடிவு செய்யும். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியின் பிரசார பயணத்தை நாங்கள் ஒரு பொருட்டாக கருதவில்லை. எங்கள் வேல் யாத்திரைக்கு பெருகிய ஆதரவை பொறுத்துக்கொள்ள முடியாமல் தான் உதயநிதி திமுகவை ஆதரித்து பிரச்சாரத்தை தொடங்கி நடத்தி வருகிறார்" என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com