“சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற பிரார்த்தனை” - எல்.முருகன்
சட்டமன்ற தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற விநாயகரிடம் பிரார்த்தனை செய்யப்பட்டதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.
சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் விநாயகர் சிலை வைத்து, அதனுடன் ரஃபேல் விமானம் போன்ற சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், “எளிமை முறையில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப் போவதாக சொன்னார்கள். அதன்படி இன்று பல்வேறு இடங்களில் விநாயக சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.
விநாயகர் சதுர்த்தி விழாவில் எஸ்.பி பாலசுப்ரமணியம், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்யப்பட்டது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அனைத்து பொதுமக்களும் விரைவில் நலம் பெற வேண்டும் எனவும் வேண்டப்பட்டது.
சட்டமன்ற தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் எனவும் பிரார்த்தனை செய்தோம். அரசின் கட்டுப்பாட்டின்படி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும். நீட் தேர்வில் மாணவர்களின் நலனை கருத்தில் கொள்ள வேண்டும். அரசாங்கம் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். பல சூழ்நிலையை கருத்தில் கொண்டு அரசு முடிவு செய்வார்கள்” என்றார்.