துப்புரவு தொழிலாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை: பாஜக பிரமுகர் கைது
சுகாதார பணியாளரான 32 வயதான பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை வரதராஜபுரத்தில் இஎஸ்ஐ மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு ஒப்பந்த பணியில் ஏராளமான ஆண் மற்றும் பெண் துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் பெண் துப்புரவு தொழிலாளி ஒருவர் பெண்கள் கழிவறையை சுத்தம் செய்ய சென்றுள்ளார். அப்போது பின் தொடர்ந்து உக்கடம் பகுதியை சேர்ந்த அதே மருத்துவமனையில் பிளம்பராக பணியாற்றும் ஜோதி என்பவர் பெண்கள் கழிப்பறைக்குள் நுழைந்துள்ளார். அத்துடன் அங்கு சுத்தம் செய்து கொண்டிருந்த பெண் துப்புரவு தொழிலாளியிடம் பாலியல் ரீதியான அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது.
அதிர்ச்சியடைந்த அந்த பெண் கூச்சலிட்டுள்ளார். கோபமடைந்த ஜோதி பெண்ணை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் துப்புரவு தொழிலாளி புகார் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து ஜோதியின் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், இந்திய தண்டனை சட்டம் கொலை முயற்சி, கொடுங்காயம் ஏற்படுத்துதல் ஆகிய பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜோதியை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஜோதி, பாஜகவின் எஸ்சி, எஸ்டி பிரிவின் பொறுப்பாளராகவும், தமிழ்நாடு தூய்மை காவலர் பொது தொழிலாளர் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவராகவும் உள்ளார். தன்னுடன் பணியாற்றும் துப்புரவு தொழிலாளி ஒருவரையே பாலியல் வன்கொடுமை செய்யும் முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சக தொழிலாளிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.