
நங்கநல்லூரில் பாஜக பிரமுகர் அக்கட்சி பிரமுகரையே அடியாட்களோடு சேர்ந்து தாக்கும் சிசிடிவி காட்சி வெளியான நிலையில் 17 நாட்கள் கழித்து மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த பாஜக ஐடி பிரிவு மாவட்ட செயலாளர் ராஜேஷ்(38). பாஜக சென்னை கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.சுப்பையா. இந்நிலையில் ராஜேஷ், தான் உள்ளாடையுடன் மது அருந்தும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக கூறி சுப்பையா அடியாட்களுடன் சென்று கடந்த 31ம் தேதி ராஜேஷை அவரது வீட்டினருகே சரமாறியாக தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்த ராஜேஷ் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் பழவந்தாங்கல் காவல்துறையினர் பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் இச்சம்பவத்தில் ஈடுபட்டு தாக்கிய நபர்கள் உட்பட அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களைத் தேடி வந்தனர்.
இந்நிலையில் பாளையங்கோட்டையில் வைத்து பாஜக சென்னை கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர் சுப்பையா அவரது உறவினர் முத்தரசன், மற்றும் ஜவகர் ஆம்ஸ்ட்ராங் ஆகியோரைக் கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் காவல் துறையினர் ஆஜர்படுத்தியுள்ளனர்.
சம்பவம் நடந்து 17 நாட்களாக தலைமறைவாக இருந்த நிலையில் தற்போது கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.