கோயில்கள் சேதப்படுத்தப்பட்டது மன வேதனை அளிக்கிறது - எல்.முருகன்
கோவையில் கோயில்கள் சேதப்படுத்தப்பட்டது மன வேதனையை அளிக்கிறது என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோயம்புத்தூரில் மாகாளியம்மன் கோயில், விநாயகர் கோயில், சங்கமேஸ்வரர் கோயில், செல்வ விநாயகர் கோயில் என நான்கு கோயில்கள் முன்பாக டயர்களை எரித்து நாசவேலை செய்திருப்பது மன வேதனையை அளிக்கிறது. இந்து மத வழிப்பாட்டு ஸ்தலங்கள் மீது நடைபெறும் தாக்குதல்கள் கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளின் மீது நடபெறும் தாக்குதலாகவே பார்க்கிறேன்.
இந்த சதி வேலையில் ஈடுபட்டவர்களுக்கு மட்டுமல்லாமல் இதன் பின்னால் இருந்து இயக்குகிற அமைப்புகளுக்கும் தக்க தண்டனை வழங்க வேண்டும். இந்த நிகழ்வு தொடர்பாக சேலம் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த கஜேந்திரன் என்பவரை கைது செய்துள்ளதாக தெரிகிறது. இவரே நான்கு கோயில்களில் டயர்களை எரித்து கோவிலை சேதப்படுத்தியிருப்பாரா என்ற சந்தேகம் எழுகிறது. இந்த கும்பலில் யார், யார் இருக்கிறார்கள் என்பதை கண்டறிய வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.