”தேசிய மலரான தாமரையை பாஜகவுக்கு சின்னமாக ஒதுக்கியது ஏன்? வழக்கு போடுவோம்” - சீமான் குற்றச்சாட்டு
செய்தியாளர்: R.முருகேசன்
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யபட்டு உடல்நலக் குறைவால் உயிரிழந்த சாந்தன் திருவுருவ படத்திற்கு மலர்தூவி நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இதில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு மலர் தூவி புகழ் அஞ்சலி செய்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்...
சாந்தன் மறைவு குறித்து உருக்கம்!
எந்த ஒரு குற்றத்தையும் செய்யாமல் 30 ஆண்டுகாலம் தண்டனையை அனுபவித்த தம்பி சாந்தன் ஆத்மா சாந்தியடையட்டும். பெயருக்கு ஏற்றார் போல் சாந்தமாக இருக்கக்கூடிய ஒரு நபர், கத்தி கூட பேசாத ஒரு நபர். நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது அவர் பேச ஆரம்பித்து பேசினாலும் அவர் பேசியது காதுகளில் கேட்காத அளவிற்கு அமைதியாக பேசுவார். ஆனால் அவருடைய கடைசி நம்பிக்கை தன் தாயை பார்த்து விட வேண்டும் என்பது. அது கூட நடக்கவில்லை. இது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது
கட்சிக்கு விவசாயி சின்னம் கிடைக்காதது குறித்து?
நாம் தமிழர் கட்சியின் சின்னம் பறிபோனதற்கு பின்னணியில் பாஜக இருக்கிறது. தேர்தல் முடிந்த பின்பு அவர்கள் வைத்திருக்கக் கூடிய தாமரைச் சின்னத்தின் மீது வழக்கப் பதிய இருக்கிறோம். ஏற்கனவே நாம் தமிழர் கட்சிக்கு மயில் சின்னம் வேண்டுமென தேர்தல் ஆணையத்தை கேட்டிருந்தபோது அவர்கள் தேசிய பறவை அதனால் ஒரு கட்சிக்கு சொந்தமானதாக கொடுக்க முடியாது என தெரிவித்தனர். ஆனால், தேசிய மலரை மட்டும் எப்படி ஒரு கட்சியின் சின்னமாக வைத்திருக்க முடியும். இல்லையெனில் தேசிய மலரை மாற்றுங்கள். ரோஜா, கனகாம்பரம் அல்லது காலிபிளவர் பூவை தேசிய மலராக அறிவியுங்கள். விவசாய சின்னம் வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தை அணுக இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.