நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாஜக மாவட்டத் தலைவர்களுடன் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள பாஜக, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது குறித்து சென்னையில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. வெற்றி வாய்ப்புள்ள இடங்களை கூட்டணி கட்சி நிர்வாகிகளிடம் கேட்டு பெறுவது குறித்தும், வேட்பாளர்கள் தேர்வு குறித்தும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆலோசித்து வருகிறார். உள்ளாட்சி தேர்தல் பரப்புரை குறித்தும் திட்டங்களை வகுத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக மூத்தத் தலைவர்கள் பொன். ராதாகிருஷ்ணன், சி.பி. ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். கூட்டத்திற்கு பின்னர் அதிமுகவுடன் இடப்பகிர்வு பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பாஜக குழு அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.