பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி தமிழக பாஜகவினர் உற்சாக கொண்டாட்டம்
குஜராத், இமாச்சல் ஆகிய இரு மாநிலங்களிலும் பாஜகவின் வெற்றி உறுதியாகி உள்ள நிலையில் தமிழக பாஜக தொண்டர்கள் அதனை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவராக கடந்த இரு தினங்களுக்கு முன் ராகுல் காந்தி பொறுப்பேற்றார். இதனால் குஜராத், இமாச்சலப் பிரதேச தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுமா என பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் பின்னடைவைத் தான் சந்தித்திருக்கிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை போல, இரு மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெற்றி ஆட்சி அமைக்க உள்ளது.
இந்நிலையில் இரு மாநில தேர்தலிலும் பாஜகவின் வெற்றியை நாடு முழுவதும் உள்ள பாஜக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். சென்னையில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் திரண்ட ஏராளமான தொண்டர்கள் இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். அப்போது சந்தோஷத்தில் கத்திய அவர்கள், ‘மோடி வாழ்க’, ‘மோடி வாழ்க’ என பிரதமரை புகழ்ந்தனர். இதேபோல் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திலும் பாஜக தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மகிழ்ச்சியில் திளைத்த அவர்கள், கேக் வெட்டி அதனை மற்றவர்களுக்கும் பகிர்ந்து தங்களது அளவில்லா மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

