தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயல் நியமனம்.. காரணம் சொன்ன சாமிநாதன்!
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பணிகளில் இறங்கியுள்ளன. அந்தவகையில்தான், பாஜக தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா நியமித்துள்ளார். அதன்படி, தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளராக மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இணைப் பொறுப்பாளர்களாக மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் முரளிதர் மோஹோல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், 3 பேர் அடங்கிய இந்தக் குழு, நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நிறைவடைந்த பிறகு தமிழ்நாடு வந்து தேர்தல் பணிகளில் ஈடுபட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. முன்னதாக, பைஜெயந்த் பாண்டா முதலில் பாஜக தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் மாற்றப்பட்டு பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
பியூஷ் கோயலை நியமிப்பதற்கான காரணம் என்ன?
அரசியலில் அதிக அனுபவம் வாய்ந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளராக நியமிப்பதற்கான காரணம் என்ன என்பது குறித்து பத்திரிக்கையாளர் சாமிநாதன் பேசுகையில், “தமிழ்நாட்டில் 1967-இல் இருந்து தேசிய கட்சிகளுக்கு இடம்கொடுக்காத மாநிலமாகவே இருந்து வருகிறது. தற்போதுஅதிமுக, பாஜக கூட்டணியில் இருந்தாலும், அகில இந்திய அளவில் பாஜகவுக்கு சவாலாக திமுக மாறியிருக்கிறது.
மேலும், ஆளுநருக்கு எதிரான உச்ச நீதிமன்ற உத்தரவு, எஸ்.ஐ.ஆர்-கான எதிர்ப்பு போன்ற திமுகவின் செயல்பாடுகளால் பாஜக நெருடலுக்குள்ளாகிறது. அந்த நெருடல்தான், பாஜக எப்படியாவது தமிழ்நாட்டில் காலூன்றிவிட வேண்டும் என எண்ண வைக்கிறது. அதன் ஒரு வெளிப்பாடே மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமித்திருப்பது” எனத் தெரிவித்துள்ளார்.

