”விவசாயிகளுக்கு எதும் செய்யல; ஆனா நானும் டெல்டாகாரனு சொல்லிட்டு இருக்காரு” - ஸ்டாலினை சாடிய அண்ணாமலை

தமிழகத்தில் கடந்த 63 ஆண்டுகளில் 16 லட்சம் ஹெக்டேர் சாகுபடி பரப்பளவை குறைத்ததுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை என அண்ணாமலை பேசினார்.
Annamalai
Annamalaipt desk

தஞ்சை பனகல் கட்டடம் அருகில் விவசாய தமிழர் விழிப்புணர்வு நலச்சங்கம் சார்பில், டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்க ஒப்பந்த அனுமதியை ரத்து செய்ய வைத்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு நன்றி மற்றும் பாராட்டு விழா கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், கலந்து கொண்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசும்போது,

காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தை பிரதமர் மோடி 2018 ஜூன் 1 ஆம் தேதி அமைத்த பின்னர்தான் காவிரி நீர் பங்கீடு பிரச்னை இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழக துணை முதல்வராக இருந்த ஸ்டாலின்தான் மீத்தேன் எடுக்கும் திட்டத்தில் கையெழுத்து போட்டவர். அப்போது மன்னார்குடி பகுதியில் செய்யப்பட்ட ஆய்வின்படிதான் நிலக்கரி எடுக்க கடந்த மார்ச் 29 ஆம் தேதி அறிவிப்பு வெளியானது.

உடனடியாக மத்திய அமைச்சரை தொடர்பு கொண்டு, நிலக்கரி எடுத்தால் விவசாயம் பாதிக்கப்படும் என எடுத்துக் கூறியதை அடுத்து ஏப் 5 ஆம் தேதி நிலக்கரி எடுக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டது.

ஆனால், டெல்டாகாரன் என சிலர் கூறிக் கொள்கிறார்கள். உண்மையான டெல்டாகாரன் யார் என்றால் நம்மாழ்வார், எம்.எஸ்.சுவாமிநாதன், உ.வே.சா, சிவாஜி கணேசன் ஆகியோர்தான். விவசாயிகளுக்கு துணை நின்றவர்கள். அதே போல் இங்குள்ள விவசாயிகளும் டெல்டாகாரன்தான். ஆனால், இங்குள்ள விவசாயிகளுக்கு எந்த வசதியும் செய்து தராமல் நானும் டெல்டாகாரன் என முதல்வர் ஸ்டாலின் கூறுவதை எப்படி ஏற்க முடியும்.

1960ஆம் ஆண்டு தமிழகத்தில் பாசன கால்வாய்கள் மூலம் சாகுபடி நிலப்பரப்பு 11 சதவீதமாக இருந்து 2023-ல் 3.4 சதவீதமாக குறைந்துள்ளது. அதாவது கால்வாய் மூலம் 9 லட்சம் ஹெக்டேரிலிருந்து 6 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது.

அதேபோல நீர்த்தேக்கமான குளம், ஏரி மூலம் பாசன பரப்பு 9.41 லட்சம் ஹெக்டேரிலிருந்து 3.69 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது. 1960-ல் 61 லட்சம் ஹெக்டேராக இருந்த பாசன பரப்பு கடந்த 63 ஆண்டுகளில் 45 லட்சம் ஹெக்டேராக மாறி, 16 லட்சம் ஹெக்டேர் பாசன பரப்பு குறைந்துள்ளது. இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனையா என கேள்வி எழுப்பினார்.

அதே போல் இந்தியாவில் பிற மாநிலங்களை விட தமிழகத்தில் விவசாயிகளின் சராசரி ஆண்டு வருமானம் குறைவாகவே உள்ளது. இதை உயர்த்த இந்த திராவிட மாடல் ஆட்சியில் முயற்சிகள் ஏதும் செய்யவில்லை. ஆனால், தமிழகத்தில் உள்ள விவசாயிகள் மாத்தி யோசித்து அரசியல் சிந்தனை பெற வேண்டும். தமிழகத்தில் டாஸ்மாக் சாராயத்தின் விற்பனையை உயர்த்த எடுக்கும் முயற்சியை கூட விவசாயத்துக்கு இந்த தமிழக அரசு முயற்சிகள் எதுவும் எடுக்கவில்லை. இதனை விவசாயிகள் உணர வேண்டும் என பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com