யாரை காப்பாற்றத் துடிக்கிறது இந்த திமுக அரசு? - கேள்விகளை அடுக்கிய அண்ணாமலை!
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக மாணவி அளித்த புகாரில், ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழு விசாரித்தது. இந்தநிலையில், இதன் தீர்ப்பை சென்னை மகளிர் நீதிமன்றம் நேற்றைய தினம் (ஜூன் 2) ஆம் தேதியன்று அறிவித்தது .
அதில், அதிகபட்ச தண்டனையான 30 ஆண்டுகளுக்கு தண்டனைக் குறைப்பு இல்லாமல் ஆயுள் தண்டனையை ஞானசேகரன் அனுபவிக்க வேண்டும் என்றும், அதேபோல பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் 90 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அத்தொகையை, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இந்த தீர்ப்பு நல்ல வரவேற்பை பெற்றநிலையில், எதிர்கட்சிகள் பலர், யார் அந்த சார் என்று கடைசி வரை கண்டுபிடிக்கவில்லை என்றும், திமுக அரசு இதில் அரசியல் செய்கிறது, யாரையோ காப்பாற்ற முயல்கின்றது என்றும், பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
இந்தநிலையில், பாஜக அண்ணாமலை அண்ணாபல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக தனது சமூக வலைதளப்பக்கத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில், “ அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் தாக்குதல் வழக்கில், திமுக நிர்வாகி ஞானசேகரனுக்கு, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது. #SaveOurGirls_NotYourSir எனினும், இந்த வழக்கு தொடர்பான பல விடை தெரியாத கேள்விகள், இன்னமும் எஞ்சியிருக்கின்றன. யாரை காப்பாற்றத் துடிக்கிறது இந்த திமுக அரசு? சில விடைகளும், பல கேள்விகளும்!” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், இதன் கீழ் ஒரு காணொளியும் இணைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக தன்னிடம் ஆதாரம் இருப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்தநிலையில், தற்போது இந்த கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார்.