பல்லாவரம்
பல்லாவரம்முகநூல்

பல்லாவரம்| “குடிநீரில் கழிவு நீர் கலந்திருந்தால்..” அமைச்சரின் பதிலுக்கு அண்ணாமலை கடும் கண்டனம்!

“தண்ணீர்தான் பாதிப்புக்கு வழிவகுத்திருக்கும் என்றால் 300, 400 பேர் பாதிக்கப்பட்டிருப்பார்கள். எனக்கு வந்த தகவலின்படி, உடல்நலம் சரியில்லாமல் போனதற்கு முந்தைய நாள் மீன் சாப்பிட்டு இருக்கிறார்கள்” - என அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்
Published on

சென்னை பல்லாவரம் அருகே திடீரென வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, கிட்டத்தட்ட 30 பேர் நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இருவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டனர். இந்நிலையில் இவ்விவகாரத்தில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறிய ஒரு கருத்து, அரசியல் தளத்தில் பேசுபொருளாகியுள்ளது. என்ன நடந்தது? பார்க்கலாம்...

சென்னை மலைமேடு முத்தாலம்மன் கோயில் தெரு, மாரியம்மன் கோயில் தெரு பகுதியில் வசித்து வரும் 15 பெண்கள் உட்பட 30 பேருக்கு நேற்று இரவு திடீரென வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அனைவரும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், 54 வயதான திருவேதி மற்றும் மோகனரங்கா ஆகியோர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

பல்லாவரம்
“தலைக்கணம், திமிரின் உச்சம்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது ஜெயக்குமார் கடும் விமர்சனம்!

இச்சம்பவத்துக்கு ‘மக்கள் அருந்திய குடிநீரில், கழிவுநீர் கலந்ததுதான் காரணம். மாநகராட்சி நிர்வாகம் சரியாக நீரை பராமரிக்கவில்லை’ என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதை வழிமொழிந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "குடிநீர் என்பது மிக அடிப்படையான ஒன்று; அதனை மிகுந்த கவனத்துடன் விநியோகிக்க வேண்டியது அரசின் கடமை. புயல் கரையைக் கடந்ததும், குடிநீர், கழிவுநீர் குழாய்கள் இடையே எவ்வித கலப்பும் இன்றி முறையாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறதா என்பதை அரசு உறுதிசெய்திருக்க வேண்டும்”

இந்நிலையில் இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று நலம் விசாரித்தபின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “இவர்களின் பாதிப்புக்கு குடிநீரில் கழிவுநீர் கலந்தது காரணமென சிலர் சொல்கின்றனர். ஆனால் அது உறுதியாகவில்லை. குடிநீர் மாதிரியை ஆய்வுக்காக அனுப்பி இருக்கிறோம். எதனால் பாதிப்பு என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். உயிரிழந்த 2 பேரின் உடல்கள் உடற்கூராய்வு செய்யப்பட உள்ளது. எதற்கெடுத்தாலும் எதிர்க்கட்சித்தலைவர் பதற்றத்தை ஏற்படுத்துகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அமைச்சர் தா.மோ.அன்பரசன் நிகழ்விடத்தில் ஆய்வு சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், குடிநீரில் கழிவுநீர் கலக்கப்படவில்லை என தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போது அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். தண்ணீர் குடித்ததால் பாதிப்பு வந்திருக்கும் என்றால், கிட்டதட்ட 300, 400 பேர் பாதிக்கப்பட்டிருபார்கள். எனக்கு வந்த தகவலின்படி, உடல்நலம் சரியில்லாமல் போனதற்கு முந்தைய நாள் மீன் சாப்பிட்டு இருக்கிறார்கள். அதில் ஏதும் சிக்கல் இருக்கலாம். நாங்கள் ஆய்வு செய்ததில், குடிநீரில் கலந்ததாக தெரியவில்லை.. உணவில்தான் ஏதோ கலந்தது போல தெரிகிறது” என்று தெரிவித்தார்.

அமைச்சர் தா.மோ. அன்பரசன் இந்த பதிலுக்கு கண்டனம் தெரிவித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

அதில் அவர், “சென்னை பல்லாவரம் அருகே, குடிநீரில் கழிவு நீர் கலந்ததால், உடல் நலம் பாதிக்கப்பட்டு, 23 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதும், மூன்று உயிரிழந்திருப்பதும் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உடல் நலம் பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவாக நலம்பெற வேண்டும் கொள்கிறேன்.

இது குறித்து கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர்களிடம், குடிநீரில் கழிவு நீர் கலந்திருந்தால், 300 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் 20 பேர் மட்டும்தான் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மக்கள் மீதுதான் தவறு இருக்கிறது என்று திமிராகப் பதிலளித்துள்ளார் அமைச்சர் திரு. தா.மோ.அன்பரசன். குடிநீரில் கழிவு நீர் கலக்கவில்லை என்றால், அமைச்சரும், திமுகவினரும் அந்தப் பகுதியில் வழங்கப்படும் குடிநீரைக் குடிக்க முன்வருவார்களா?

அதுமட்டுமின்றி, தெருக்களில் ப்ளீச்சிங் பவுடருக்குப் பதிலாக, மைதா மாவு தூவப்பட்டதா என்ற கேள்வியை எழுப்பிய ஊடக சகோதரரிடம், ப்ளீச்சிங் பவுடர் விலை ரூ. 10 - 13 தான் என்கிறார் அமைச்சர் திரு. தா.மோ.அன்பரசன். ஆனால், ப்ளீச்சிங் பவுடரை ஏன் ரூ.55க்கு மாநகராட்சி கொள்முதல் செய்திருக்கிறது என்ற ஊடக சகோதரரின் கேள்விக்கு அமைச்சரிடம் பதில் இல்லை.

பல்லாவரம்
“தலைக்கணம், திமிரின் உச்சம்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது ஜெயக்குமார் கடும் விமர்சனம்!

எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என, மக்கள் நலன் குறித்த அக்கறை சிறிதும் இன்றிச் செயல்படும் இந்த மக்கள் விரோத அரசால், அப்பாவி பொதுமக்கள் தினம் தினம் உயிரிழப்பு வரை பாதிக்கப்பட்டும், சிறிதும் வெட்கமே இன்றி, திராவிட மாடல் அரசு என்று விளம்பரம் செய்து கொண்டிருக்கும் முதலமைச்சர் திரு.ஸ்டாலினுக்கு, உண்மையில் கள நிலவரங்கள் தெரிவிக்கப்படுகின்றனவா என்ற கேள்வி வலுப்படுகிறது.” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com