பறவைக் காய்ச்சல் | அச்சம் வேண்டாம்.. பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்!
பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவ வாய்ப்புள்ளதால், மருத்துவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட பறவைகளின் உமிழ்நீர், சளியை தொடுவதன் மூலம் வைரஸ் பரவலாம். N95 முகக்கவசம், கையுறைகள் அணிய வேண்டும். கைகளைச் சோப்பு போட்டு நன்றாகக் கழுவ வேண்டும்.
பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவ வாய்ப்புள்ளதால், எச்சரிக்கையுடன் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட பறவைகளின் உமிழ்நீர், சளியை தொடுவதன் மூலம் பாதிப்பு மனிதர்களுக்கும் பரவலாம். வைரஸ் படிந்துள்ள மேற்பரப்புகளைத் தொட்டுவிட்டு, கைகளைக் கழுவாமல் கண், மூக்கு அல்லது வாயைத் தொடுவதன் மூலம் பறவைக் காய்ச்சல் பரவுகிறது.
சரியாகச் சமைக்கப்படாத கோழி இறைச்சியை உண்பதன் மூலமும் பறவைக் காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அவ்வாறு பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு, அதிக காய்ச்சல் மற்றும் குளிர், தொடர் இருமல், தொண்டை வலி, தசை வலி, உடல் சோர்வு, மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அறிகுறிகள் தெரிந்தவுடன் மருத்துவரை அணுகுவது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பறவைகளின் எச்சம்பட்ட இடங்களைத் தொட வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை, பறவைகள் நடமாடும் இடங்களில் விளையாட விட வேண்டாம் எனவும், கோழிப் பண்ணைகளில் வேலை செய்பவர்கள் அல்லது பறவைகளுக்கு அருகில் இருப்பவர்கள் கட்டாயம் N95 முகக்கவசம் மற்றும் கையுறைகளை அணிய வேண்டும் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். மேலும் இறைச்சியைக் கையாண்ட பிறகோ அல்லது பறவைகள் இருந்த இடங்களுக்குச் சென்ற பிறகோ, கைகளை சோப்பு போட்டு நன்றாகக் கழுவ வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

