சுதந்திர தினத்தை கொண்டாடும் அதேவேளையில், மாசில்லா பசுமை சுதந்திர தினத்துக்காக பயோ தேசியக் கொடிகளை கோவை மாநகராட்சி அறிமுகப்படுத்தி உள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துள்ள கோவை மாநகராட்சி, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத இயற்கைப் பொருட்களை சந்தைப்படுத்துவதிலும், பயன்பாட்டுக்கு கொண்டு வருவதிலும் அக்கறை காட்டி வருகிறது.
அந்த வகையில், டவுன்ஹால் பகுதியில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் இயங்கி வரும் பசுமை அங்காடியில், பயோ தேசியக் கொடிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஃபுட் கலர், விதைகள் கொண்ட, முழுக்க முழுக்க இயற்கை முறையிலான பயோ-மூவர்ணக் கொடிகளை கோவை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது.
கொடிகளை பயன்படுத்திவிட்டு தூக்கிப் போட்டால் செடியாக மரமாக வளரக்கூடிய இந்த பயோ-தேசியக் கொடிகள் குறைந்த விலையில் தரப்படுவதால், தேசியக்கொடி என்ற பெருமையோடு மட்டுமின்றி, இயற்கைக்கு தீங்கு விளைவிக்காத ஒன்று என பெருமிதத்துடன் கூறலாம் என கோவை மாநகராட்சி தெரிவித்துள்ளது.