கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை 3 ஆண்டுகளாக குறைக்கும் மசோதா நிறைவேற்றம்

கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை 3 ஆண்டுகளாக குறைக்கும் மசோதா நிறைவேற்றம்
கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை 3 ஆண்டுகளாக குறைக்கும் மசோதா நிறைவேற்றம்

கூட்டுறவு சங்கங்களின் நலனை பாதுகாக்கும் வகையில் இயக்குனர்கள் குழுவின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து மூன்று ஆண்டுகளாக குறைக்க வகை செய்தற்கான சட்டத் திருத்தம் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

1983-ஆம் ஆண்டு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டத்தினை திருத்தம் செய்வதற்கான சட்டமுன்வடிவை கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேரவையில் தாக்கல் செய்தார். இந்த சட்டமுன்வடிவில் பொதுமக்களிடமிருந்தும் கூட்டுறவுசங்கங்களின்உறுப்பினர்களிடமிருந்தும், நிதி முறைகேடுகள் மற்றும் மோசடி தொடர்பாக பல புகார்கள் வரப்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டதில், அதிக அளவிலான நிதி முறைகேடுகள், போலி நகைகள் மீதான கடன்கள், மற்றும் கோடிக்கணக்கில் கடன் வழங்கப்பட்டுள்ளது போன்றவை வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே கூட்டுறவு சங்கங்களின் நலனை பாதுகாக்கும் நோக்கில் அவற்றின் நிர்வாகங்களை நெறிப்படுத்தவும், முறையான ஆளுகையை உறுதிசெய்யவும் கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகளின் திறனை அதிகரிக்கவும், சங்கங்களின் இயக்குனர்களின் குழுவின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து மூன்று ஆண்டுகளாக குறைக்க தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

2013-ஆம் ஆண்டு கூட்டுறவு சங்கங்களின் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு, 3 ஆண்டுகளாக இருந்த பதவிக் காலத்தினை 5 ஆண்டுகளாக அப்போது அதிமுக மாற்றியது. அதன்பின் கடந்த 2018ஆம் ஆண்டு கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில் அரசின் இந்த புதிய சட்டத்தால் கூட்டுறவு சங்கங்களில் உள்ள அனைத்து பதவிகளும் முழுமையாக காலியாகிறது.

இது முழுக்க அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தம் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.  இந்த மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டவுடன், அறிமுக நிலையிலேயே எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பேரவையிலிருந்து அதிமுகவினர் வெளிநடப்பும் செய்தனர். கூட்டுறவு சங்கங்களின் சட்டத்தினை பொறுத்தவரை இதுவரை 4 முறை இதில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com