விழுப்புரம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே திருவெண்ணைநல்லூர், எலவனசூர்கோட்டை, உளுந்தூர்பேட்டை ஆகிய பகுதிகளில் இருசக்கர வாகனம் அதிகம் திருடுபோவதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து திருக்கோவிலூர் சாலையில் உளுந்தூர்பேட்டை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது எறையூர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பாலஜி என்பவரை அவர்கள் பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் வயல்வெளியில் மாடுகள் திருடுவதும், வீட்டை உடைத்து திருடுவதும் இருசக்கர வாகனம் திருடுவதையும் ஒப்புக்கொண்டார்.
இவருக்கு உடந்தையாக இருந்த அதே ஊரைச் சேர்ந்த அருண், சக்திவேல் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனத்தை பதுக்கியிருப்பது தெரியவந்ததையடுத்து, அந்த வாகனங்களை போலீசார் கைப்பற்றினர்.