இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதிய கார் - சிசிடிவி காட்சி வெளியீடு
பெரம்பலூர் அருகே துறைமங்கலத்தில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவி பலத்த காயமடைந்துள்ளார்.
துரைராஜ், அலமேலு தம்பதியரின் மகளான 21 வயது கீர்த்தனா, சிறுவாச்சூரில் தனியார் கல்வியியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். நேற்று தங்கள் விளைநிலத்திற்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, துறைமங்கலம் மூன்று ரோடு சலையில் அதிவேகமாக வந்த கார் மோதி விபத்தில் சிக்கினார்.
இதில் படுகாயம் அடைந்த கீர்த்தனா பெரம்பலூர் தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கீர்த்தனாவின் நிலை கவலைக்கிடமாக இருந்ததால், மீண்டும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. விபத்து ஏற்படுத்திய அரசு வாகனத்தில் மாவட்ட ஆட்சியரின் பெற்றோர் வந்ததாக தகவல்கள் பரவி வருகின்றன. இதுதொடர்பான தகவல்களை தெரிவிக்க காவல்துறையினர் மறுத்துவிட்டனர்.