டிட்வா புயல் எதிரொலி.. பாரதிதாசன் பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு!
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் சென்னைக்கு தெற்கே 430 கி.மீ தொலைவில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. ரெட், ஆரஞ்சு அலெர்ட்டுகள் விடுக்கப்பட்ட நிலையில், திருச்சி உட்பட 12 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி இருக்கும் டிட்வா புயலானது, தற்போது சென்னைக்கு தெற்கே 430 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளதாகவும், புயல் தற்போது 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்துவருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் டிட்வா புயல் தென்மேற்கு வங்கக்கடலிலேயே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்றும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே சென்னையை வந்தடையும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது..
இந்தசூழலில் டிட்வா புயல் எச்சரிக்கையாக தமிழகத்தில் 4 மாவட்டங்களில் ரெட் அலெர்ட்டும், 14 மாவட்டங்களில் ஆரஞ்சு அலெர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது..
பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு..
டிட்வா புயல் எச்சரிக்கை காரணமாக திருச்சி உட்பட 12 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..
இந்தசூழலில் திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த இளநிலை மற்றும் முதுநிலை தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், மறுதேர்வுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

