
ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு மேலும் 40 நாட்கள் அவகாசம் வழங்கி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள், புடவைகளை கர்நாடக அரசு ஏலம் விட வேண்டும் என்று கோரி பெங்களூருவை சேர்ந்த தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் நரசிம்மமூர்த்தி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி மோகன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரது முடக்கப்பட்ட வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தின் இன்றைய மதிப்பு குறித்து அறிக்கை வழங்க நீதிபதி கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.
மேலும் ஜெயலலிதாவின் ஆயிரக்கணக்கான சேலைகள் செருப்புகள் மற்றும் கைகடிகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் நீதிமன்ற தீர்ப்பின்படி சட்டவிரோதமாக சேர்க்கப்பட்ட சொத்துகள் பட்டியலில் இடம்பெறாத காரணத்தினால் ஏலம் விட முடியாது என நீதிமன்றம், ஆர்டிஐ ஆர்வலர் நரசிம்ம மூர்த்திக்கு தெரிவித்தார்.
மேலும் தீர்ப்பில் கூறியுள்ளபடி 30 கிலோ தங்க, வைர நகைகள் உள்ளிட்ட பொருட்களை ஏலம் விட்டு அதில் கிடைக்கும் தொகையில் ரூ.100 கோடியை அபராதமாக செலுத்த வேண்டும் என்றும், மீதமுள்ள தொகையில் ரூ.5 கோடியை கர்நாடக அரசுக்கு தமிழக அரசு வழக்கு செலவாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்திருந்தார்.
மேலும் ஆறு பினாமி நிறுவனங்களின் 65 அசையும் மற்றும் அசையா சொத்துகளின் தற்போதைய மதிப்புடன் கூடிய அறிக்கையை லஞ்ச ஒழிப்பு போலீசார் தாக்கல் செய்ய பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து.
சொத்துகளின் தற்போதைய மதிப்பீட்டை தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் தாக்கல் செய்ய 35 நாட்கள் கால அவகாசம் வழங்கி வழக்கு விசாரணையை அக்டோபர் ஆறாம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இந்த வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி மோகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடக அரசு சார்பில் சிறப்பு வழக்கறிஞர் கிரண் ஜவலி, தமிழக லஞ்ச ஒழிப்பு சார்பில் துணை காவல் கண்காணிப்பாளர் புகழ்வேந்தன் ஆகியோர் ஆஜராயினர். அப்போது புகழ்வேந்தன், ஜெயலலிதாவின் சொத்துகளை மதிப்பீடு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மேலும் 40 நாட்கள் காலஅவகாசம் வேண்டும் என்று கேட்டார்.
அதற்கு நீதிபதி, 40 நாட்கள் காலஅவகாசம் வழங்குவதாகவும், இதுவே கடைசி காலஅவகாசம் என்றும் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு இறுதி கெடு விதித்து உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (நவம்பர்) 16-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.