தினம் 500 ரூபாய்! குழந்தைகளை வாடகைக்குஎடுத்து பிச்சை எடுக்கும் அவலம்! திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்

திருச்சியில் குழந்தைகளை வாடகைக்கு எடுத்து பிச்சை எடுக்கும் அதிர்ச்சி சம்பவம் வெளியாகி உள்ளது.
திருச்சி அம்மா மண்டபம்
திருச்சி அம்மா மண்டபம்புதிய தலைமுறை

திருச்சி காவிரி ஆற்றின் அம்மா மண்டபம் வாசலில் சில பெண்கள் பிச்சை எடுப்பதாக காவல் துறையினருக்கு தகவல் வந்தது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு காவல் துறை அதிகாரிகள் விரைந்து சென்று களஆய்வு மேற்கொண்டனர். அப்போது காவல்துறை அதிகாரிகளைக் கண்டதும் குழந்தைகளைவைத்து பிச்சை எடுத்துவந்த பெண்களில் சிலர் அலறியடித்துக் கொண்டு ஓட்டம்பிடித்தனர்.

அப்போது காவல்துறை அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்துவந்த 8 பேரைப் பிடித்து விசாரணை செய்தனர். அந்தக் குழந்தைகள் பிச்சை எடுப்பதற்காக வாடகைக்கு வாங்கிவரப்பட்ட குழந்தைகள் என விசாரணையில் தெரியவந்தது. சம்பந்தப்பட்ட 8 குழந்தைகளை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

திருச்சி ஶ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஆடி அமாவாசையான இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திருச்சி மட்டுமன்றி பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். இந்த நிலையில், அப்பகுதியில் சில பெண்கள் கைக்குழந்தைகளை இடுப்பில் சுமந்தபடி பிச்சை எடுத்தனர். இது, பிச்சை எடுப்பவருக்கு சொந்தமான குழந்தையா எனப் பலருக்கும் சந்தேகம் எழுந்தது.

இதுதொடர்பாக காவல் துறையினர் நடத்திய விசாரணையில், பிச்சை எடுப்பதற்காக தினசரி ரூ.500க்கு குழந்தைகள் வாடகைக்கு கிடைப்பதாகவும், அவ்வாறாகக் கிடைக்கும் குழந்தைகளை வாடகைக்கு வாங்கிவந்து யாசகம் பெறுவதாகவும் தெரிவித்தனர். இதில் தொடர்புடைய 8 குழந்தைகளை குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் மீட்டு, அக்குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் திருச்சி சைல்ட் லைன் அமைப்பிடம் ஒப்படைத்தனர். அத்தகைய குற்றச் செயலில் ஈடுபடும் நபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாநகர காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com