சரக்கோடு சரிந்த லாரி.. மூட்டை மூட்டையாக மதுபானத்தை அள்ளிய மதுப்பிரியர்கள்!

சாலையோரம் கவிழ்ந்து விழுந்த லாரியில் இருந்து மதுப்பிரியர்கள் பீர் பாட்டில்களை அள்ளிச்சென்ற சம்பவம் செங்கல்பட்டில் அரங்கேறியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பீர் பாட்டில்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த லாரி விபத்துக்குள்ளானது. திருவள்ளூரில் இருந்து விழுப்புரம் நோக்கி பயணித்த இந்த லாரி, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதனால், லாரியில் இருந்த பீர் பாட்டில்கள் மொத்தமாக பள்ளத்தில் சரிந்தன. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், லாரி விபத்துக்குள்ளானது தெரிந்த மதுப்பிரியர்கள், அங்கு வந்து பீர் பாட்டில்களை அள்ளிச்சென்றனர். மேலும், “மதுப்பிரியர்கள் நாங்கள்.. மது இல்லையென்றால் உயிரை விடுவோம். மது விலையை குறைக்க வேண்டும்” என்றெல்லாம்கூறி போதையில் அட்டகாசம் செய்தனர். ஒருசிலர் 2, 3 பாட்டில்களை எடுத்துச்சென்றனர். பெரும்பாலானோர், மூட்டை மூட்டையாக பாட்டில்களை சாக்குப்பையில் கட்டி தூக்கிச்சென்றனர்.

போதாக்குறைக்கு, பாட்டில்களை அங்கிருந்த வயலிலும் பதுக்கி வைத்தனர். சம்பவம் குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில், பதுக்கி வைத்திருந்த பாட்டில்களை ஊழியர்கள் தேடி எடுத்துச் சென்றனர். இதற்கிடையே உடைந்த பெட்டிகளை விடுத்து, மற்ற பெட்டிகளை மாற்று லாரி கொண்டு ஊழியர்கள் ஏற்றிச்சென்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com