ஆளுநர் வரும் வரை ஒன்றாக இருங்கள்: அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு அறிவுறுத்தல்
ஆளுநர் வரும் வரையில் எம்எல்ஏ-க்கள் அனைவரும் ஒன்றாக சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருக்க வேண்டும் என அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியுள்ளார். சட்டமன்றத்தில் தனது பலத்தை நிரூபிப்பேன் என்றும் கூறியிருக்கிறார். இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தலைமையில் அக்கட்சி எம்எல்ஏ-க்கள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் சசிகலா அச்சம் என்பது மடமையடா என்ற பாடலை மேற்கோள் காட்டி பேசினார். இந்நிலையில் கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக எம்எல்ஏ-க்கள் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருக்க வேண்டும் என அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள், 2 பேருந்துகளில் சென்னை விமான நிலையம் அருகே உள்ள நட்சத்திர ஓட்லுக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு தங்கவைக்கப்பட்டனர். ஆளுநர் தமிழகம் வரும் வரை, எம்எல்ஏ-க்கள் அனைவரும் ஒன்றாக இருக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.