திருவண்ணாமலையில் மாற்று திறனாளிகளுக்கு பேட்டரி கார் சேவை
திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் மாற்று திறனாளிகளுக்கு உதவும் வகையில் பேட்டரி கார் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதன்முறையாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வரும் மாற்று திறனாளிகளை பேருந்து நிறுத்தத்தில் இருந்து அழைத்து வர பேட்டரி கார் சேவை திருவண்ணாமலையில் இன்று துவங்கி வைக்கப்பட்டது. துவக்க விழாவில் மாற்று திறனாளிகளை பேட்டரி காரில் அமரவைத்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமியே காரை ஓட்டினார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் மாற்று திறனாளிகள் சிரமப்பட்டு வரும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு அவர்களுக்கென பேட்டரி கார் சேவை துவங்கப்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் 31 துறை அலுவலகங்களுக்கும் செல்ல மாற்றுத்திறனாளிகள் பல சிரமங்களுக்கு உள்ளாகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பேட்டரியால் இயங்கும் ஒரு காரினை மாற்று திறனாளிகளுக்கென வடிவமைத்துள்ளனர். இதில் அவர்கள் இலவசமாக ஏறிக்கொண்டு மாவட்ட அலுவலகத்திற்குள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், அங்கிருந்து திரும்ப வரலாம். இந்த வாகனங்களை மாற்று திறனாளிகளே இயக்குவார்கள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.