fire accidentpt desk
தமிழ்நாடு
பெரம்பலூர்: சார்ஜ் போட்டிருந்தபோது திடீரென தீப்பற்றிய பேட்டரி பைக்!
பெரம்பலூர்: சார்ஜ் போட்டிருந்தபோது திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது ஒரு எலக்ட்ரிக் பைக். இந்த விபத்தில், 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்களும் எரிந்து நாசமானது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பொன்னகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகுவேல். இவர் தனது இருசக்கர பேட்டரி வாகனத்திற்கு சார்ஜ் போட்டுவிட்டு வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென வீட்டிலிருந்து புகை வந்துள்ளது. உள்ளே சென்று பார்த்தபோது, அவரது இருசக்கர பேட்டரி வாகனம் தீப்பிடித்து எரிந்துள்ளது தெரியவந்துள்ளது.
fire accidentpt desk
இதைக்கண்டு அவர் கத்தி கூச்சலிட்டதையடுத்து, அருகில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்துள்ளனர். ஆனால், அதற்குள் அவரது பேட்டரி வாகனம் முழுவதுமாக எரிந்து சேதமடைந்ததோடு, அருகில் இருந்த மற்றொரு இருசக்கர வாகனம் மற்றும் வாஷிங் மெஷின், பிரிட்ஜ் உள்ளிட்ட மூன்று லட்ச ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்களும் தீக்கிரையானது. இது தொடர்பாக மங்களமேடு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.