திருச்சி: கோயில் யானைக்கு ரூ.5 லட்சம் செலவில் குளியல் தொட்டி
திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயில் யானை லட்சுமிக்கு, ஷவர் வசதியுடன் குளியல் தொட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அதில் படுத்துப் புரண்டு ஆனந்த குளியலாடும் லட்சுமி யானையை சிறுவர் முதல் பெரியவர் வரை வியந்து, ரசித்துப் பார்த்துச் சென்றனர். கோயில்களில் பராமரிக்கப்படும் யானைகளுக்கு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு வசதிகளும், சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்படுவதுடன், ஆண்டுக்கு ஒருமுறை புத்துணர்வு முகாம் நடத்தப்பட்டு ஆரோக்கியமாக பராமரிக்கப்படுகின்றன. அந்த வகையில், யானை லட்சுமிக்காக ஐந்து லட்சம் ரூபாய் செலவில், 22 அடி நீளமும் 22 அடி அகலமும் கொண்ட குளியல் தொட்டி தற்போது கட்டப்பட்டுள்ளது.
இந்தத் தொட்டியை முதல்முறையாகக் கண்ட லட்சுமி, குளத்தைக் கண்டதுபோல் தண்ணீருக்குள் விழுந்து, படுத்து, தன் கால்களை மேலும் கீழும் உதைத்தவாறு ஆனந்தமாய் குளித்தது. ஷவரில் இருந்து பீறிட்டு கொட்டிய தண்ணீரில் லட்சுமி யானை விளையாடிய காட்சி, காண்போர் மனதையெல்லாம் கொள்ளையடித்தது. இதுபோன்ற குளியல் தொட்டியில் நீராடும்பொழுது, யானையின் உடல் உஷ்ணம் குறைந்து, ஆரோக்கியத்துடன் இருக்கும் எனக் கூறினார் பாகன்.