சேலம்: கொரோனா தொற்றால் உயிரிழந்த தலைமை காவலர் குடும்பத்திற்கு ரூ.18.5 லட்சம் நிதியுதவி
ஏற்காட்டில் வேலை செய்யும் கொரோனா தொற்றால் உயிரிழந்த தலைமை காவலர் குடும்பத்திற்கு அவரது பேட்ச் போலீசார் இணைந்து 18.5 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கினர்.
சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் நிர்மல்குமார். இவர் கடந்த 2002-ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம்நிலை காவலராக பணியில் சேர்ந்தார். பின்னர் பதவி உயர்வுபெற்று தலைமை காவலராக ஏற்காட்டில் பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி ஹரிப்பிரியா என்ற மனைவியும், ரித்திகா என்ற மகளும், சிவகிரி என்ற மகனும் உள்ளனர். குழந்தைகள் பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கொரோனா முதல் அலை காலத்தில் மக்களை காக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். அதேபோல கொரோனா இரண்டாம் அலையிலும் மக்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் கொரோனா கட்டுபாட்டு பணிகளை செய்து வந்தார். இந்நிலையில், அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், தொடர் சிகிச்சை அளித்தும் பலனின்றி நிர்மல்குமார் உயிரிழந்தார். இதனால், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இந்நிலையில், 2002-ம் பணியில் சேர்ந்த போலீசார் இணைந்து தமிழ்நாடு போலீஸ் உதவும் உறவுகள் என்ற அமைப்பை ஏற்படுத்தினர். இந்த அமைப்பு மூலம் பணியில் இருக்கும்போது உயிரிழக்கும் போலீசாருக்கு நிதி உதவிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த அமைப்பின்கீழ் 2002-ம் ஆண்டு போலீசார் ஒன்றிணைந்து நிதி சேகரித்தனர். பின்னர் நிர்மல்குமார் குடும்பத்தாருக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி ஒன்றை ஓமலூரில் நடத்தி, அதில் அவருடைய படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து அவரது குடும்பத்தாருக்கு 18,54,765 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஓமலூர் உட்கோட்ட காவல் சரகத்தில் பணியாற்றும் போலீசார் உட்பட தமிழகம் முழுக்க இருந்து பலரும் கலந்துகொண்டனர். இதில், பலருக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

