“பேனர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும்” - உயர்நீதிமன்றத்தில் வழக்கு
டிஜிட்டல் பேனர் நிறுவனங்கள் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுக்க தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் பேனர் தயாரிப்பு நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன.
பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் மரணமடைந்ததை தொடர்ந்து, சென்னை மாநகராட்சி டிஜிட்டல் பேனர் அச்சகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதில், அனுமதி இல்லாமல் டிஜிட்டல் பேனர் அச்சிடுவோருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி, செப்டம்பர் 19ம் தேதி அனுப்பிய நோட்டீசை ரத்து செய்யக் கோரி, டிஜிட்டல் பேனர் தயாரிப்பு நிறுவன உரிமையாளர்களில் ஒருவரான எஸ்.பஷீர் அகமது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், உயர்நீதிமன்றம் டிஜிட்டல் பேனர்களை தடை செய்யவில்லை என்றும், பிரிண்டிங் பிரஸ் மற்றும் டிஜிட்டல் பேனர் நிறுவனங்களுக்கு சீல் வைக்க எந்த உத்தரவும் பிறபிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். டிஜிட்டல் பேனர் எங்கு வைக்க வேண்டும் என்று நாங்கள் கட்டுப்படுத்த முடியாது என்றும், சுபஸ்ரீ மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
யார் விதிகள் மீறி பேனர் வைத்தார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, தயாரிப்பு நிறுவனங்கள் மீது அரசு அதிகாரிகள் கோபத்தை காட்டக்கூடாது என்று மனுவில் கூறியுள்ளார். எனவே எங்கள் தொழில் பாதிக்கப்படுவதாகவும், எங்கள் தொழிலில் மாநகராட்சி அதிகாரிகள் தலையிடுவதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் ஷேஷசாயி முன் முறையிடப்பட்டது. மனுவை தாக்கல் செய்யுங்கள் நாளை (செப்டம்பர் 25) டிராபிக் ராமசாமி வழக்குடன் விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.