மாதவரம் மார்க்கெட் : பழங்களை தொட்டுப் பார்த்து வாங்க தடை
மாதவரம் பழ மார்க்கெட்டிற்கு வரும் மக்கள், பழங்களை தொட்டுப்பார்த்து வாங்கவும், நுகரவும் வியாபாரிகள் தடை விதித்துள்ளனர்.
கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேசெல்கிறது. ஏற்கெனவே மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் மக்களும் வியாபாரிகளும் அதை கடைபிடிக்காததால் கோயம்பேட்டில் கொரோனா தொற்று வேகமாக பரவியது.
அதன் மூலம் மற்ற மாவட்டங்களும் அதிகமாக பாதிக்கப்பட்டன. இதனால் கோயம்பேடு சந்தை மூடப்பட்டு திருமழிசையில் தற்போது காய்கறி சந்தை இயங்கி வருகின்றது.
இந்நிலையில், மாதவரம் பழ மார்க்கெட்டிற்கு வரும் மக்கள் பழங்களை தொட்டுப்பார்த்து வாங்கவும், நுகரவும் வியாபாரிகள் தடை விதித்துள்ளனர். தொற்று பரவும் அபாயம் காரணமாக பல வியாபாரிகள் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். நுகர்வோருக்கு தேவையான பழங்களை வியாபாரிகளே எடை போட்டுத் தருகிறார்கள்.