“கடன் வாங்கித்தருவதாக 1 கோடி மோசடி செய்த கும்பல்” - கூண்டோடு பிடித்த போலீஸ்
சென்னையில் பலரிடம் கடன் வாங்கித் தருவதாக மோசடி செய்த திருட்டுக் கும்பலை காவல்துறையினர் கூண்டோடு பிடித்துள்ளனர்.
சென்னை கொளத்தூரைச் சேர்ந்தவர் பத்மநாதன் பாபு. இவரை சிலர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய ஒரு நபர், தான் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்திலிருந்து பேசுவதாக கூறியுள்ளார். அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் இருந்து பேசும் நபர் போல என நினைத்து, அவரை நம்பியுள்ளார் பத்மநாதன். ரூ.5 லட்சம் கடன் பெற்றுத்தருவதாக அந்த நபர் கூற, என்ன நடைமுறைகள்? என்று பத்மநாதன் வினவியுள்ளார். முறைகள் எதுவும் பெரிதாக இல்லை, ரூ.50 ஆயிரம் உங்கள் வங்கிக்கணக்கில் இருப்பு வையுங்கள், ரூ.5 லட்சம் கடனை எளிமையாக பெற்றுவிடலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
அவர் கூறியதுபோலவே ரூ.50 ஆயிரத்தை வங்கிக்கணக்கில் போட்டுள்ளார் பத்மநாபன். பின்னர் பேசிய அந்த மர்ம நபர், கடன் பெறுவதற்கு சில தகவல்கள் வேண்டுமென வங்கித் தகவல்களை பெற்று, ரூ.50 ஆயிரத்தை தனது வங்கிக் கணக்கிற்கு மாற்றிக்கொண்டு மோசடி செய்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பத்மநாபன், இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதனிடம் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவிற்கு ஆணையர் உத்தவிட்டுள்ளார். அதன்படி, உதவி ஆணையர் பிரபாகரன், ஆய்வாளர் மீனா பிரியா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
இந்தத் தீவிர விசாரணையில், இந்த மோசடியை செய்தது ஒரு தனிநபர் அல்ல, ஒரு பெரிய கும்பல் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 70 பெண்கள் உட்பட 125 பேர் கொண்ட கும்பல் இந்த மோசடியை செய்துள்ளது. பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் முகவர்கள் போல பேசி மோசடி செய்யும் இவர்கள், ஒரு பெரிய அலுவலகமே நடத்திவந்துள்ளனர். அங்கு கம்ப்யூட்டர், போன் எல்லாம் வைத்து தினமும் பலருக்கு போன் செய்து வங்கிக் கடன் வேண்டுமா ? எனக் கேட்டு மோசடி செய்வதை தொழிலாக செய்து வந்துள்ளனர்.
இந்த நிறுவனம், சென்னை சூளைமேடு, தேனாம்பேட்டை, வடபழனி, ஆவடி, ஆலந்தூர், நூங்கம்பாக்கம் ஆகிய இடங்களில், ‘அல்ட்ரா ட்ரெண்ட்ஸ் எண்டெர்பிரைசஸ்’, ‘கிரிஷ் கன்சல்டன்சி’, ட்ரிஃபெக் அஸ்ஸோசியெட்’, ‘டெக் பிராசெர்ஸ் பிரைவேட் லிமிடெட், ‘ஃபார்சுன் எண்டெர்பிரைசஸ்’ என்று பல கம்பெனிகளின் பெயர்களில் பி.பி.ஓ செண்டர் நடத்தி மோசடி செய்து வந்துள்ளனர்.
இவர்கள் பயன்படுத்திய வங்கிக் கணக்குகள், கம்பெனி சீல்கள், ஆவணங்கள் ஆகியவற்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இந்தக் கும்பல் 6 மாதங்களுக்கு மேலாக ரூ.1 கோடிக்கு மேல் மக்களிடம் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்தக் கும்பலைச் சேர்ந்த முக்கியக் குற்றவாளிகளான வெங்கடேஷ் (கொண்டிதோப்பு, சென்னை), விக்னேஷ் (திருச்சி), பூபதி (வேலூர்), சதீஷ் (சோழிங்கநல்லூர், சென்னை), சார்லஸ் (பாட்டாளம், சென்னை), திராவிட அரசன் (செய்யாறு), கிருஷ்ணகுமார் (கோடம்பாக்கம்) ஆகியோர் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக மேலும், விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.