வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்...! சேவை பாதிக்கப்படும் அபாயம்..!
ஊதிய உயர்வு, ஒப்பந்த முறைகளை மாற்றியமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
அகில இந்திய அளவில் வங்கி அதிகாரிகளின் வேலைநிறுத்த போராட்டத்தில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது. இதன் காரணமாக வங்கிப் பணிகள் நடைபெறாது என்ற நிலையில் அடுத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வருவதாலும் வங்கிகள் இயங்காத நிலை உள்ளது. அடுத்த திங்கள் கிழமை மட்டும் வங்கிகள் இயங்க உள்ள நிலையில் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக விடுமுறை விடப்பட உள்ளது. தொடர்ந்து 5 நாட்களில் ஒரு நாள் தவிர 4 நாட்கள் வங்கிகள் இயங்காது என்பதால் அவற்றின் சேவைகள் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனாலும் இந்த விடுமுறை காலத்தில் ஏடிஎம்-கள் வழக்கம் போல் செயல்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பின் வரும் 26-ஆம் தேதி மட்டும் ஏடிஎம்களின் பணத்தட்டுப்பாடு ஏற்படலாம் எனப்படுகிறது.