பங்களாதேஷ் சிறுவனுக்கு கோவையில் அறுவை சிகிச்சை : நெகிழ்ச்சி சம்பவம்
தன்னார்வலர்களின் உதவியால் பங்களாதேஷைச் சேர்ந்த சிறுவனுக்கு கோவையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
பங்களாதேஷைச் சேர்ந்த 9 வயது சிறுவன் முகமது ஹசன் ஹாரிஸ். இந்த சிறுவனுக்கு இதயத்தில் துளை இருந்ததுள்ளது. ஆனாலும் வறுமையால் சிகிச்சைப் பெற முடியவில்லை. இதனை ஓமன் நாட்டில் பணிபுரிந்த போது, சிறுவனின் உறவினர் மூலம் வேதாரண்யத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் அறிந்தார்.
இதையடுத்து விடுமுறையில் கடந்த மார்ச் மாதம் சொந்த ஊர் வந்த ராஜசேகர், சிறுவன் மற்றும் அவரது பெற்றோரையும் வரவழைத்து மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்தார். கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிறுவனின் அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் கொரோனா பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால், சிறுவனின் அறுவை சிகிச்சை தள்ளிப்போனது.
இருப்பினும் சிறுவன் மற்றும் அவரது பெற்றோர்களை ராஜசேகர் தனது சொந்த செலவில் பராமரித்துள்ளார். இதையறிந்த தன்னார்வலர்கள் இருவர் சிறுவனின் அறுவை சிகிச்சைகான செலவை ஏற்றுக்கொண்டனர். இதனால் கடந்த 16ஆம் தேதி சிறுவனின் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. இந்தச் சம்பவம் மனித நேயம் இன்னும் இருக்கிறது என்ற நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.