கேரளாவில் இருந்து வரும் கோழிகளுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
மத்தியப் பிரதேசம் மற்றும் கேரளாவில் உள்ள பறவைகளுக்கு பறவைக் காய்சசல் இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து மத்திய அரசு, பறவைக்காய்ச்சல் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது. அந்த நடவடிக்கையின்படி இந்தியாவில் கேரளா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், இமாச்சல், ஹரியானா, குஜராத் ஆகிய 6 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் தமிழக அரசு கேரளாவில் இருந்து வரும் கோழிகள், வாத்துகள், முட்டைகள் ஆகியவற்றுக்கு தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கேரளாவில் இருந்து வரும் கோழிகள், வாத்துகள் முட்டைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்குப் பரவும் என்பதால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தமிழகத்தில் இதுவரை பறவைக்காய்ச்சல் இல்லை. கேரள மாநில எல்லையோரம் உள்ள மாவட்டங்களில் ஆட்சியர்கள் தலைமையில் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கோழிகள் அதிக அளவில் சந்தேகத்துக்குரியதாக திடீரென இறந்தால் அருகிலுள்ள கால்நடை மருத்துவரிடம் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக நீலகிரி,கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.” எனக் கூறப்பட்டுள்ளது.