தமிழ்நாடு
ஜெய்பீம்: வன்முறையைத் தூண்டும் விதமாக பேசுவதா? - பாமகவினருக்கு கே.பாலகிருஷ்ணன் கண்டனம்
ஜெய்பீம்: வன்முறையைத் தூண்டும் விதமாக பேசுவதா? - பாமகவினருக்கு கே.பாலகிருஷ்ணன் கண்டனம்
'சூர்யாவை எட்டி உதைக்கிற முதல் இளைஞனுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு என்று, வன்முறையைத் தூண்டும் விதத்தில் பாமகவினர் பேசியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது' எனத் தெரிவித்துள்ளார் கே.பாலகிருஷ்ணன்.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் ''தமிழ் திரைப்பட உலகில் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்கள் திரைப்படங்களாவது அரிதினும் அரிதான சமயத்தில், ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்ட கதைக்களத்துடன் வெளிவந்த ஜெய்பீம் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றிருக்கிறது. நடிகர் சூர்யா மற்றும் படக்குழுவினர் இதன்மூலம் சமூக பங்களிப்பைச் செய்துள்ளனர். படத்தின் மீது சுட்டிக்காட்டப்பட்ட சில விமர்சனங்களுக்கு தயாரிப்பாளர் தரப்பிலிருந்து சரியான விளக்கமும், படக் காட்சிகளில் ஒரு சில திருத்தங்களும் செய்திருப்பதாகத் ஏற்கனவே அறிவிக்கப்படுள்ளது.
படம் தொடர்பான தொலைக்காட்சி விவாதத்தில் பங்கெடுத்த தோழர் ஆதவன் தீட்சண்யா அவர்களுக்கு மிரட்டல் விடுத்ததும், சூர்யாவைத் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசியும், திரைப்படத்தை வெளியிட விடமாட்டோம், சூர்யாவை எட்டி உதைக்கிற முதல் இளைஞனுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு என்று, வன்முறையைத் தூண்டும் விதத்திலும் பாமகவினர் பேசியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. இப்போக்கு அனுமதிக்கப்படுமானால் எதிர்காலத்தில் தமிழகத் திரையுலகமே நிர்மூலமாக்கப்படும். எனவே, தமிழகத்தில் வன்முறைக் கலாச்சாரத்தை அனுமதிக்கக் கூடாது. மேலும், இதுபோன்று வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசுபவர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.