
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் மசினி என்ற 16 வயது பெண் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானையை பாகன் பாலன் (54) பராமரித்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை யானை பாகன் பாலன், மசினி யானைக்கு வழக்கம் போல உணவு கொடுத்துவிட்டு யானையின் கால்களில் சங்கிலியை கட்டியுள்ளார். அப்போது, திடீரென மசினி யானை, பாகன் பாலனை தாக்கி மிதித்திருக்கிறது.
இதில் யானை பாகன் பாலனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சக யானை பாகன்கள் படுகாயமடைந்த பாலனை யானையிடமிருந்து மீட்டு, உடனடியாக சிகிச்சைக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
முன்னதாக மசினி யானை தாயைப் பிரிந்த நிலையில், 3 மாத குட்டியாக முதுமலை வனப்பகுதியில் மீட்கப்பட்டது. பின்னர் 2015 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் மசினி யானையை திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வழங்கினார். தொடர்ந்து யானை மசினி கடந்த 2018 ஆம் ஆண்டு திருச்சி, ஸ்ரீரங்கம் கோயிலில் பராமரிக்கப்பட்டு வந்தது அப்போது, அங்கு பாகனை தாக்கிக் கொன்றது. பின்னர் உடல்நிலை பாதிக்கப்பட்ட மசனி யானை, தஞ்சாவூருக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவுபடி மசினி யானை மீண்டும் 2019 ஆம் ஆண்டு தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு மீண்டும் கொண்டுவரப்பட்டது. உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு மோசமான நிலையில் கொண்டுவரப்பட்ட மசினி யானைக்கு வனத் துறையினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து குணப்படுத்தினர். இதைத் தொடர்ந்து தெப்பக்காடு வளர்ப்பு அணைகள் முகாமிற்கு கொண்டுவரப்பட்ட மசினி யானை முன்பு போல் இல்லாமல், சற்று குறும்பு தனத்துடன் இருந்தது. அவ்வப்போது யானை பகனை தாக்க முயற்சி செய்வது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது.
இந்த நிலையில்தான் இன்று காலை யானை பாகன் பாலனை தாக்கி கொன்றுள்ளது. தற்சமயம் யானையை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ள வனத் துறையினர் அதனை தனிமைப்படுத்தி வைத்துள்ளனர். யானை மன உளைச்சலில் இருப்பதாகவும் அது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.