பெண் குழந்தை ரூ.1 லட்சத்திற்கு விற்கப்பட்ட அவலம் : 3 பேர் கைது
திருச்சியில் பச்சிளம் பெண் குழந்தையை ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்த இருவரையும், விலை கொடுத்து
வாங்கியவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே உள்ள வளப்பூர்நாட்டைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி பிரேமாவுக்கு
மூன்றாவதாக பிறந்த குழந்தையும் பெண்ணாக பிறந்துள்ளது. இதனால் அந்தப் பிஞ்சுக் குழந்தையை வளர்க்க முடியாது என்ற
மனநிலைக்கு வந்த சுரேஷ், குழந்தையை விற்றுவிடலாம் என தவறான முடிவெடுத்துள்ளார். அத்துடன் குழந்தையை
விற்றுவிடும்படி திருச்சி மாவட்டம் துறையூர் அருகே வசிக்கும் தனது உறவினரான வெள்ளையம்மாள் என்பவரிடம்
தெரிவித்துள்ளார்.
அதன்படி சுசீலாதேவி என்பவரது உதவியுடன், துறையூர் அருகே உள்ள பெருமாள்மலை அடிவாரத்தைச் சேர்ந்த சகுந்தலா தேவி
என்ற பெண்ணிடம் குழந்தையை ஒரு லட்சம் ரூபாய்க்கு வெள்ளையம்மாள் விற்றுள்ளார். இந்த விவகாரம் திருச்சியில்
இருக்கும் குழந்தைகள் நல அமைப்பனருக்கு தெரியவந்ததுள்ளது. அவர்கள் உப்புலியபுரம் காவலதுறையினரிடம் புகார்
அளித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அந்த குழந்தையை மீட்டுள்ளனர். பின்னர் குழந்தையை
பாதுகாப்பாக திண்டுக்கல்லில் உள்ள காந்தி ஆசிரமத்தில் ஒப்படைத்தனர். மேலும், குழந்தையை விற்ற வெள்ளையம்மாள்,
சுசீலாதேவி மற்றும் குழந்தையை விலை கொடுத்து வாங்கிய சகுலந்தா ஆகியோரை கைது செய்தனர். இதுதொடர்பாக
காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.