விரைவில் அயோத்தி தீர்ப்பு - தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு எச்சரிக்கை
விரைவில் அயோத்தி வழக்கின் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் மதரீதியான மோதல்கள் ஏற்படாமல் தடுக்க தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அயோத்தி வழக்கில் தீர்ப்பு அடுத்த மாதம் வெளிவர உள்ளது. இந்த வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அடுத்த மாதம் 17ம் தேதி ஓய்வு பெற உள்ளதால், அதற்கு முன்பு தீர்ப்பை வெளியிட உள்ளார். இந்த தீர்ப்பிலே ஏதேனும் ஒரு பிரிவினருக்கு சாதகமான முடிவு இருந்தால், அதன் காரணமாக மதரீதியாக பதட்டம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு கருதுகிறது.
இதனால் அயோத்தியில் ஏற்கனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, மத ரீதியாக பதற்றம் வராமல் இருக்க மத்திய அரசு, உள்துறை அமைச்சகம் மூலம் தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு ரகசிய எச்சரிக்கை அனுப்பி உள்ளது என மூத்த அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் காஞ்சிபுரம் வரதராஜர் ஆலயம், மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம், மற்றும் சென்னையில் உள்ள பார்த்தசாரதி ஆலயம் போன்ற முக்கிய வழிபாட்டு ஸ்தலங்களில் பாதுகாப்பு பலமாக இருக்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் கருதுகிறது. அதுபோல முக்கிய மசூதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என உள்துறை அமைச்சகம் கருதுகிறது.
அயோத்தி தீர்ப்பு காரணமாக பதட்டம் ஏற்பட்டால், அதை பயன்படுத்தி சமூக விரோதிகள் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளை உண்டாக்கலாம் என்பதால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்தியிலும், உத்தரபிரதேச மாநிலத்திலும் பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்று வருவதால், அந்த கட்சியை சேர்ந்தவர்கள் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள். இதைத்தவிர, ஆர்எஸ்எஸ் மற்றும் விஹெச்பி போன்ற அமைப்புகளும் ராமர் கோயில் விரைவில் கட்டப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.